விஜய மகாதேவி 2 [Vijaya Mahadevi] (விஜய மகாதேவி, #2)
(By Sandilyan) Read EbookSize | 22 MB (22,081 KB) |
---|---|
Format | |
Downloaded | 598 times |
Last checked | 9 Hour ago! |
Author | Sandilyan |
கடற்பகுதியில் அவள் கண்முன்பு தெரிந்தது ஒரு சிறிய மரக்கலம். அது மிக வேகமாகத் தங்கள் கப்பலை நெருங்கிக் கொண்டிருந்ததையும், சாளரத்தின் குறுகல் காரணமாக அதன் அடிப்படை பெரிதாகி மேற்பகுதிகள் கண்களுக்கு மறையத் துவங்கி விட்டதையும் கண்டதால் அவளும் எழுந்திருக்க முற்பட்டதைப் பார்த்த விஜயன், “சுந்தரி எந்தக் காரணத்தை முன்னிட்டும் இந்த அறையைவிட்டு நகராதே”, என்று எச்சரித்துவிட்டுத் துரிதமாக வெளியே சென்றுவிட்டான். சென்றபோது வேகமாக அறைக்கதவையும் மூடிவிட்டுச் சென்றான்.
அறைக்கு வெளியே அவனுக்காகக் காத்திருந்த காமர் அவன் ஏதும் கேட்காமலிருக்கையிலேயே சொன்னார். “ஒரு மரக்கலம் நமது மரக்கலத்தை நோக்கி வேகமாக வருகிறது. அதன் மீது கொடி எதையும் காணாததால் எந்த நாட்டைச் சேர்ந்தது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை”, என்று.
விஜயன் அவருக்குப் பதிலேதும் சொல்லாமல் தலையை மட்டும் அசைத்துத் தன்னைத் தொடரும்படி சைகை காட்டித் தளத்துக்குச் செல்லும் படிகளை ஒரு படிவிட்டு ஒரு படிமேல் நோக்கி வேகமாகத் தாவிச் சென்று தனக்கு முன்பாகவே மற்றத் துறவிகளும் ஆதிமல்லனும், மூர்சமத், கிழவன், நீலன், சிம்மபுரச்சிற்பி நாகாநந்தன் முதலானவர்களும் கூட்டமாக நிற்பதைக் கண்டு, “இங்கு எதற்காகக் கூட்டம் போடுகிறீர்கள்?' என்று வினவினான். குரலில் சிறிது எரிச்சலையும் காட்டினான்.
அவன் கேள்விக்கு மற்றவர்கள் ஏதும் பதில் சொல்லாவிட்டாலும் கப்பல் தலைவரான சத்வானந்த பிக்குவே பதில் சொல்லும் பாவத்தில் சற்று தூரத்தே மிகத் துரிதமாக வந்து கொண்டிருந்த மரக்கலத்தை காட்டினார். வருவது எந்த நாடு என்பது விளங்கவில்லை. கொடி எதுவும் கிடையாது. சிறு மரக்கலமாயிருந்தாலும் அதை அலட்சியம் செய்வதற்கில்லை. பாய்கள் நமது பாய்களை விட அதிகமாகப் புடைத்திருக்கின்றன. தவிர தளத்தில் யாரும் இல்லை. பக்கவாட்டுத் துவாரங்களிலும் மனிதர் முகங்களோ ஆயுதங்களோ எதையுமே காணோம். இதற்கான காரணம் என்ன என்று விளங்கவில்லை. இத்தகைய ஒரு மரக்கலத்தை நான் ஆயுளில் கண்டதில்லை”, என்று பிக்கு விளக்கமும் சொன்னார். விளக்கம் சொன்னாரே தவிரக் குரலில் எந்தவிதக் கவலையும் காட்டவில்லை”