“Book Descriptions: நீரினில் மூழ்கி நினைப்பொழிதல் ஒரு விடுதலை. ஆனால் நீத்தோருக்கு நெறியின்மை இழைத்தோருக்கு அவ்விடுதலை இல்லை. வஞ்சத்தால், சினத்தால், பிழை விழைவால் மட்டுமல்ல அன்பால், குருதியுறவால்கூட நெறியின்மையை இழைக்கலாகும். அவரவர் எச்சம் என காணப்படும் மைந்தருக்கே அக்கடன் எஞ்சவும் கூடும்.
குருக்ஷேத்திரத்திற்குப் பிந்தைய நீர்க்கடன்களினூடாக நிகழ்ந்த ஒவ்வொன்றையும் ஒவ்வொருவரும் தொகுத்துக் கொள்வதன் சித்திரம் இந்நாவல். ஒவ்வொருவருக்கும் எஞ்சுவது வெறுமையும் துயரும்தான். வாழ்க்கையை அளித்துப் பெற்றுக்கொள்பவை வாழ்க்கைக்கு நிகரென்று ஆவதில்லை என எளிய மானுடர் உணரும் தருணங்கள்.
குருக்ஷேத்திரப்பெருங்களத்தில் எஞ்சிய நெருப்பை அணைத்துப் பெய்த மழையின் தொடர்ச்சி. அழியாநீர் என ஒழுகும் கங்கையின் கரை. முதற்கதிரின் ஒளியில் புலிமுனைப் பனித்துளி செஞ்சுடர் என ஒளிர்கிறது. சருகுகளை, பசும்புல்லை,பெருங்காட்டை எரித்துவிடும் என்பதுபோல. அது அனலேதான், நீரிலெழும் அனல். குளிர்ந்தது, சினம்தணிந்தது, எனினும் ஒளியால் அது எரியே.எனில் கங்கை என்பது மாளாதீக்கொழுந்து. கடல் என்பது அனல்பெருவெளி.
அனலென்று சுடும் நீரின் கதை. நீரையும் அனலாக்கிய சிலவற்றின் கதை இந்நாவல்.” DRIVE