“Book Descriptions: ஒவ்வொரு நாவலை எழுதுவதற்கும் முன்பாக வாழ்வைக் குறித்த சுயபரிசோதனைகளை செய்து கொள்வது வழக்கம். இதை இப்போது எழுதத்தான் வேண்டுமா என்கிற தயக்கங்களுக்கும் கேள்விகளுக்கும் உரிய பதில்கள் கிடைக்கும் வரை ஒரு நாவலை நான் எழுதத் துவங்குவதில்லை. நீலப்படம் ஒரு நடிகையின் கதையாக எழுததுவதற்காக துவங்கப்பட்டதல்ல, குழந்தைகளின் மீதான வன்முறைகளை அதன் வலிகளைத்தான் எழுதத் துவங்கினேன். ஆனந்தி, ஜோபி, பாபு எல்லோரும் தற்செயலாக அந்தக் கதையில் வந்து இணைந்து கொண்டவர்கள் அவ்வளவே. சிறுவயதில் பாலியல் வல்லுறுவுகளுக்கு உள்ளாகி குரூரமான பால்யத்தைக் கடந்து வந்த ஆனந்தி அந்த வலிகளிலிருந்து கடந்து வந்த தன்னைப் போலவே இன்னொரு குழந்தையைப் பார்க்கும்போது என்னவாகிறாள் என்கிற கதைக்கு நான் சேர்த்துக்கொண்ட கிளைக்கதைகள்தான் அவள் நடிகையாக பரிணமித்ததும் அதில் வெவ்வேறு மனிதர்கள் வந்துபோனதும். இப்போது நிதானமாக யோசிக்கையில் என் எல்லா நாவல்களிலும் தொந்தரவுக்குள்ளான பால்யத்தின் வலிகள் தொடர்ந்து வந்தபடியே இருக்கிறது. இதை திட்டமிட்டுத்தான் செய்கிறேனா என்றால் நிச்சயமாக இல்லை. தொடர்ந்து அதை எழுதுவதன் வழியாய் கடந்த காலத்தின் துயர்மிக்க நினைவுகளிலிருந்து துண்டித்துக் கொள்ள விரும்புகிறேன். எனது மற்றநாவல்கள் கொண்டாடப்பட்ட அளவிற்கு இந்த நாவல் கொண்டாடப்படவில்லை என்கிற வருத்தம் எனக்குண்டு. நாவலின் தலைப்பே அனேகருக்கு வாங்குவதற்கு அல்லது வாசிப்பதற்கான ஒரு தயக்கத்தைக் கொடுத்திருக்கலாம். கூடுதலாக ஒரு நீலப்பட நடிகையின் கதை என சிலர் எழுதியதும் அந்தத் தயக்கத்தை அதிகப்படுத்தியதற்கு காரணமாக இருந்திருக்கலாம், ஆனால் ஆபூர்வமாக சில தருணங்கள் இந்த நாவலில் இருப்பதை வாசித்த நண்பர்கள் புரிந்து கொண்டது மகிழ்ச்சியளித்தது. ஆனந்த விகடனில் பெண்கள் வாசிக்க வேண்டிய முக்கியமான நூல்களில் இந்த நாவலுக்கும் ஒரு முக்கிய இடம் கொடுத்தது. இப்போது கிண்டிலின் வழியாய் வெளியிடும் போது முற்றிலும் புதிய வாசகர்களுக்கு இந்த நாவல் சென்று சேருமென நம்புகிறேன்.” DRIVE