“Book Descriptions: வானில் பறக்கும் புள்ளெல்லாம் உலகெங்கும் சுதந்திரமாக பறக்க இங்கு மட்டும் சாதிப்பெயருடன் பறக்கின்றன. மலர்ந்து மணம் வீசும் மலர்களும் இங்கு மட்டுமே சாதியுடன் மலர்கின்றன. கடலில் நீந்தும் மீன்களும்கூட சாதியுடன் நீந்துகின்றன. சாதியம், தன்னைக் கட்டமைத்துக் கொள்ளும் முயற்சியில் இயற்கை அமைவுகளை எப்படியெல்லாம் தனக்குச் சாதகமாக வளைத்துக்கொண்டது என்கிற மர்மத்தை இந்நூல் உடைக்கிறது. ஐம்பூதங்களும் திசைகளும் தாவரங்களும் உயிரினங்களும் ஆகிய அனைத்தும் இங்குத் தீண்டாமைக்கு உள்ளாகியுள்ள செய்தி பலருக்கும் புதிதாக இருக்கும். வெப்பமண்டலத் தாவரங்களான தருப்பையும், பஞ்சினால் செய்யப்பட்ட பூணூலும் குளிர்மண்டலத்தில் இருந்துவந்த இனக்குழுவின் அடையாளமானது எப்படி? சுற்றுச்சூழல் தூய்மை என்ற சிறந்த சிந்தனையின் மீது கழுவமுடியாத சாதியக் கறை படிந்தது எப்படி? ‘கறுப்பர்களான தென்னிந்தியர்களுடன் நாங்கள் இணைந்து வாழவில்லையா?’ என்று தருண் விஜய் போன்ற திமிரானக் குரல்கள் கேட்குமளவுக்கு இயற்கையின் அசல் நிறமான ‘கறுப்பு’ இழிவாக்கப்பட்டது எப்படி? இதுபோன்ற பல கேள்விகளுக்கான விடையைச் சூழலியல் நோக்கில் தேடிப் பயணிக்கிறது இந்நூல். இது எந்தவொரு குறிப்பிட்ட சாதிக்கும் எதிரானதல்ல. அதேசமயம் சாதியை அகத்தில் சுமப்பவர்களுக்கு சாதி என்பது இயற்கையின் நியதி அல்ல என்பதை புரிய வைக்கும். இயற்கையை நேசிக்கும் எவரும் சாதியை நேசிக்க முடியாது. படைப்பில் அனைத்தும் சமம் என்பதே இயற்கை நெறி. சாதியைக் காரணம் காட்டி சக மனிதரையே நேசிக்க முடியாத ஒருவர் பிற உயிரினங்களை நேசிப்பதாகக் கூறுவது முழுப்பொய்.” DRIVE