“Book Descriptions: தமிழ்ச் சூழலில் அனுபவங்களை எழுதுவது மிகக் குறைவு. அதிலும் லட்சிய வாதத்தில் மாத்திரம் தோயாமல், கீழ்மை மேன்மைகளோடு தன்னைப் பதிவு செய்து கொள்பவர்கள் மிக மிகக்குறைவு. மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடின் சிதம்பர நினைவுகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட போது அதனுடைய வெளிப்படைத் தன்மைக்காக பெரிதும் பேசப்பட்டது, வரவேற்கப்பட்டது. கலாப்ரியாவின் “நினைவின் தாழ்வாரங்கள்” அதை விடப் பல மடங்கு கலையமைதி தோய்ந்த வெளிப்படைத் தன்மை கொண்டது. Triology போல கலாப்ரியாவின் “ நினைவின் தாழ்வாரங்கள்”, “ ஓடும் நதி”, “உருள் பெருந்தேர்” இந்த மூன்றையும் வரிசையாக வைத்து வாசிக்கலாம். அதனுடைய நீட்சியே இந்த ’சுவரொட்டி’ . தனது அனுபவங்களை வெற்றிகரமாகக் கலையாக்கும் போதே ஒரு கலைஞன் பரிணமிக்கிறான். இந்த ‘சுவரொட்டி’ வழி நாம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் கலையை, ரசனையை, பகடியை, பகட்டை, சாதாரண / அசாதாரண மனிதர்களின் எழுச்சியை, வீழ்ச்சியை, பகடையாட்டங்களை, ஆடுபவர்களே காய்களாகும் சோகங்களை அறிய முடிகிறது. அனுபவங்களை கலாப்ரியாவினால் அநாயசமாக கலையாக்க முடிகிறது. வெயில் படர்ந்த, 60களின் திருநெல்வேலி தெருக்களில் நம்மால் துல்லியமாக நடமாட முடிகிறது. அந்த தினத்தில், அந்தத் தெருவில் நடந்தவர்களின் முகக் கீறல் உட்பட நமக்குத் துலக்கமாகிறது. அது கலாப்ரியாவின் கலை ஓர்மை.