“Book Descriptions: சந்திரனும் வேலய்யனும் இளமை நண்பர்கள். இருவரும் இளமையில் ஒரே வகுப்பில் பயின்று, ஒன்றாகவே விளையாடி, ஒன்றாகவே வளர்ந்தவர்கள். ஆனால், பத்தாவது வகுப்புக்குப் பின்னர், அவர்கள் வாழ்வில் பிரிவு ஏற்பட்டது. பிரிவு விரிந்து பரந்து ஒருவரை ஒருவர் எட்டாத அளவிற்குக் கொண்டு சேர்த்துவிட்டது. சந்திரனுடைய வாழ்வு மேடு பள்ளம் நிறைந்தது. வேலய்யனுடைய வாழ்வு சமவெளியில் அமைதியாகச் செல்லும் பெரிய ஆற்றை ஒத்தது.
சந்திரனுடைய வாழ்க்கை அரளிச் செடியைப் போல், ஒருபுறம் கண்ணைக் கவரும் அழகும் நறுமணமும் உடைய மலர்களைக் கொண்டு, மற்றொருபுறம் அவற்றிற்கு மாறான இயல்புள்ள இலைகளைக் கொண்டிருப்பது. வேலய்யனுடைய வாழ்க்கை துளசிச் செடியைப் போன்றது. துளசிச் செடியில் அழகிய மலர்கள் இல்லை, வெறுக்கத்தக்க பகுதியும் இல்லை. மலரும், இலையும், தண்டும், வேரும் எல்லாம் ஒத்த ஒரே வகையான மணம் கமழ்வது அது.
சந்திரனைப் போல் நல்ல அழகும், கூரிய அறிவும் பெற்று அதனால் செருக்கடைந்து சீரழிந்து தாமும் கெட்டுப் பிறர்க்கும் சுமையாக வாழ்வதைவிட வேலய்யனைப் போல் அறிவு குறைவாக இருந்தாலும் சிறந்த பண்புகளைப் பெற்று அடக்கமான வாழ்வு வாழ்ந்தாலே போதும் என்ற உயர்ந்த வாழ்க்கைக் குறிக்கோள் இக்கதையைப் படிக்கின்றவர்கள் உள்ளத்தில் உருவாகும். இக்கதை இளைஞர்களுக்கு ஒரு பாடமாகவும் அமைகிறது. அகல்விளக்கு நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது.” DRIVE