“Book Descriptions: சிலோனில் முன்னொரு காலத்தில் கண்டி வீரன் என்றொருவன் இருந்தான். அவனுக்கு ஒரு தமிழ் விடுதலை இயக்கம் மரணதண்டனையைத் தீர்ப்பளித்ததாம். பின்னொரு சந்தர்ப்பத்தில் அந்த மரணதண்டனையை அந்த இயக்கம் விலக்கியும் கொண்டதாம். கண்டி வீரனின் சரித்திரம் பற்றி இதற்கு மேல் எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் இத்தகைய சம்பவம் எங்களது போராட்ட வரலாற்றில் வெகு அபூர்வமாகவே நிகழ்ந்த ஒன்று. இயக்கங்களின் கைகளில் சிக்கியவர்கள் மீண்டதான நிகழ்வுகள் வெகு அரிதே. குறிப்பாக மரணதண்டனை விதிக்கப்பட்ட பின்பாக அத்தண்டனை விலக்கிக்கொள்ளப்பட்ட நிகழ்வு இது ஒன்றுதான். நான் கண்டி வீரனைப் பற்றிக் கேள்விப்பட்ட நாளிலிருந்தே இது எப்படி நடந்திருக்கக் கூடும் என யோசித்து வந்திருக்கிறேன். கண்டி வீரனின் கதையை எழுத வேண்டும் என்பதில் நான் வெகு ஆர்வமாயிருந்தேன். ஆனால் இது எவ்வாறு நிகழ்ந்திருக்கும் என என்னால் கற்பனையே செய்ய முடியவில்லை. அண்மையில் நான் லியோ டால்ஸ்டாய் எழுதிய ஒரு சிறுகதையைப் படித்தேன். 'யானையைக் கட்டி யாரால் தீனி போட முடியும்" என்றொரு நீளமான தலைப்போடு அந்தக் கதையை ஆக்கூர் அனந்தாச்சாரியார் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அந்தக் கதை அய்ரோப்பாவில் 1897-ல் நடந்த கதை. ஆனால் அந்தக் கதை போலத்தான் 1984-ல் சிலோனில் நடந்த கண்டி வீரனின் கதையும் இருந்திருக்க முடியும் என எனக்குத் திடீரெனத் தோன்றியது. வேறெப்படித்தான் கண்டி வீரன் சாவிலிருந்து தப்பித்திருக்க முடியும் சொல்லுங்கள்! எனவே நான் ஆசிரியர் டால்ஸ்டாயின் அந்தக் கதையை வாங்கி அதற்குள் கண்டி வீரனின் சரித்திரத்தைப் புகுத்திச் சொல்வதற்கு நீங்கள் என்னை அனுமதிக்க வேண்டும்.” DRIVE