“Book Descriptions: “குற்றம் – மன்னிப்பு – ஏற்றுக்கொள்ளல் என்று இந்நாவல் செல்கிறது. இந்நாவலின் மனிதர்கள் அவர்களின் அத்தனைத் தவறுகளுக்கும் மன்னிக்கப்படுகிறார்கள்; அவர்களின் அத்தனைக் குறைகளோடும் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள்; வறுமையும் அலைக்கழிப்பும் தொடர்ந்து விரட்டும் வாழ்வில் தங்களுக்கான ஆசுவாசத்தை நிபந்தனையற்ற மன்னிப்பின் வழியாகவும், எதிர்பார்ப்பற்ற அன்பின் வழியாகவும் தேடிக்கொள்கிறார்கள். நீர்வழிப் படூஉம் புணைபோல் இந்நாவல் அன்பின் வழி சேர்கிறது.” தேவிபாரதி அவர்களின் ‘நீர்வழிப் படூஉம்’ நாவல் குறித்து எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்ரமணியன் பகிர்கிற வார்த்தைகள் இவை. குடிநாசுவர் எனப்படும் சிறுகுடி மக்களின் வாழ்க்கைப் பின்னணியில் ஒரு தனிமனிதனின் வாழ்க்கையின் வீழ்ச்சியை, அவனுடன் சமூகம் கொள்ளும் உள்ளார்ந்த உறவைச் சித்தரிக்கிறது இந்நாவல். தமிழின் சிறந்த நாவல் வரிசையில் நிலைகொள்ளும் இந்நாவல் தன்னறம் நூல்வெளி வாயிலாக இவ்வாண்டு வெளியாகிறது. நொய்யல்கரை மனிதர்களின் வாழ்வுப்புலத்தையும், அவர்தம் உளவியல் சலனங்களையும் அங்குள்ள சமூகப் பின்னணியில் நிறுவி ஆராயும் புனைவுப்போக்கு தேவிபாரதியை தமிழின் முதன்மைப் படைப்பாளிகளில் ஒருவராக இடங்கொள்ளச் செய்கிறது. கடந்த நாற்பது ஆண்டுகளாக இவரது இலக்கிய மனம் படைத்துக் கொண்டிருக்கிறது. இவருடைய நாவல்கள் இவருக்குரிய இலக்கிய இடத்தை பறைசாற்றவல்லன. அவைகளிலுள்ள வடிவ ஓர்மையும் செறிவான வட்டார மொழிநடையும் புனைவுப்படைப்புகளை ஆழமுறச் செய்கின்றன. “ஒரு படைப்பாளியாக தேவிபாரதியின் இடம் என்பது சென்றகாலத்தில் சிக்கிக்கொண்டிருக்கும் மனிதர்களில் மீட்பில்லாது அழிபவர்களின் துயரத்தைச் சொன்னார் என்பதுதான். அதன் வழியாக வரலாற்றில் எளியமனிதர்களின் இடமென்ன என்னும் ஆழமான வினாவை எழுப்புகிறார்.” என தமிழ்.விக்கி இவரைப்பற்றி குறிப்பிடுகிறது.” DRIVE