“Book Descriptions: பசுமரத்து ஆணி போல, மனதில் ஆழமாகப் பதிந்துகிடக்கும் இளமைக் கால நினைவுகளைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ளும் சுகமே அலாதியானது. குறிப்பேடுகளில் குறித்துவைத்த சம்பவங்களைவிட, மனதில் பதிந்த விஷயங்கள் விசேஷமானவை. நினைத்தாலே இனிக்கக்கூடியவை. அப்படி, தனது மனதில் தேங்கியிருந்த சுகமான நினைவுகளை, எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான சுகா, ஆனந்த விகடனில் ‘மூங்கில் மூச்சு!’ என்ற தலைப்பில் தொடராக எழுதிவந்தார். மண்ணின் மணத்தோடு துவங்கி, பால்ய பருவத்து சகாக்களுடனான சந்தோஷ தருணங்களையும், ஆறு, கோயில், குளம், நீச்சல், விளையாட்டு... என வாழ்ந்த சூழலையும் நம் கண்முன்னே நிழலாடச் செய்திருக்கிறார். வாழ்வோடு ஒன்றிய பல விஷயங்களை வர்ணனைகளோடு வார்த்தைகளில் வடித்திருக்கிறார். அறிவு புகட்டிய ஆசான் முதல், அன்பு பாராட்டிய உறவுகள் வரை அனைவரைப் பற்றியும் நெல்லைத் தமிழ் மொழியின் வாசனையோடு, ஜனரஞ்சகமாக, சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார். எலெக்ட்ரானிக் யுகத்தின் தலைமுறை மாற்றத்தையும் கூறியிருப்பது படிப்போரின் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக உள்ளது. சென்னைக்கு வந்த பிறகு, திரைத்துறையின் வழிகாட்டியான பாலுமகேந்திரா பற்றியும், பாலசந்தர், பாலா, சீமான், அறிவுமதி போன்றோருடனான நெருக்கத்தையும், சுவையான சம்பவங்களையும் திரையிட்டுக் காட்டுகிறார். ஆட்டோ டிரைவர், சைக்கிள் ரிக்ஷாக்காரர், கண் பார்வை தெரியாத முதியவர்... என பலரையும் தன் நினைவுகளில் தேக்கிவைத்து இவர் வெளிப்படுத்தியிருப்பது, பசுமையான அனுபவம் கொண்டிருக்கும் எவருக்கும், தம் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டும்.
A Life experience of a man in and about Tirunelveli” DRIVE