மன்னன் மகள் [Mannan Mahal]
(By Sandilyan) Read EbookSize | 23 MB (23,082 KB) |
---|---|
Format | |
Downloaded | 612 times |
Last checked | 10 Hour ago! |
Author | Sandilyan |
ஆகாயத்தை அளாவி நின்ற பிரும்மாண்டமான கோட்டைச் சுவர் வெகு தூரம்வரை வளைந்தோடுவதையும், இருபது அடி தூரத்துக்கு ஒருதரம் மேலே ஏறிச் செல்லப் பெரிய பெரிய படிகள் சுவரை அணைத்து நிற்பதையும் கண்ட கரிகாலன், ஏதோ பெரிய போர் அரணுக்குள் தான் இருப்பதைத் தெரிந்து கொண்டான். சுவரின் உச்சி மட்டம் இருந்த மாதிரியிலிருந்தும், தொலை தூரத்திற்கப்பால் இருந்த சுவரின் ஒரு பகுதியில் ஆயுதம் தரித்த வீரர்கள் பாராக் கொடுத்துக் கொண்டு நின்ற திலிருந்தும், சுவர் சுமார் நான்கடி அகலத்துக்காவது நிர் மாணிக்கப்பட்டிருக்க வேண்டுமென்பதைக் கரிகாலன் சந்தேகமறப் புரிந்து கொண்டான். யுத்த சாத்திரத்தை நன்றாக அறிந்த அவனுக்கு இந்தக் கோட்டை சாளுக்கியர்களின் போர் பாதுகாப்பு முறைப்படி அமைக்கப்பட்டிருக்கிறதென்பதையோ, ஆகவே தான் கீழைச் சாளுக்கியர் களின் மிக முக்கியமான ஒரு கோட்டைக்குள் சிக்கியிருப்பதையோ அறிய, அதிக நேரம் பிடிக்கவில்லை.சாளுக்கிய வீரர்களிடமிருந்து தப்பிய தன்னை விதி உந்தி, சாளுக்கியர் களின் கோட்டைக்குள் சிக்க வைத்தது எத்தனை விந்தை என்று நினைத்துப் பெருமூச்சொன்றும் விட்டான். அத்தனை ஆபத்தான நிலையிலும், அந்தக் கோட்டையின் அழகையும், சாளுக்கியர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், நந்தவனப் பிரதேசத்தின் வனப்பையும் ரசிக்கா திருக்கக் கரிகாலனால் முடியவில்லை.
கோட்டையும், கோட்டைக்குள்ளிருந்த கட்டடங்களும் நந்தவனத்தின் பெரிய மரங்களும், சிறிது செடிகளும், செடிகளையும் மரங்களையும் தழுவி நின்ற கொடிகளும் வெண்ணிலவிலே கண்ணைப் பறிக்கும் எழிலுடன் விளங்கின. கோட்டைச் சுவரை அடுத்து நின்ற பெரிய நந்தவனத்துக்கு அப்பால், தூரத்தே தெரிந்த பிரும்மாண்டமான கட்டடமும் அதன் ஸ்தூபிகளும் நிலவைக் கிழித்துக் கொண்டு எழுந்த பல பாணங்கள் போல் ஆகாயத்தை நோக்கிக் கிளம்பி நின்றன. அந்தக் கட்டடத்தையும் நந்தவனத்தையும் பிரித்து நின்ற சிறிய இடைச்சுவர், தான் அந்தக் கட்டடத்தைப்போல் அத்தனை உயரமில்லையே என்ற துக்கத்தால் உள்ளம் கறுத்து அந்தக் கருமைக்கு அடையாளமாகத் தன் கறுப்பு நிழலைத் தோட்டப் பகுதியில் பாய்ச்சி நின்றது. சுற்றிலும் ஓடிய பெரிய கோட்டைச் சுவர்கூட தனக்குக் கீழே இருந்த ஆயுத அறைகளை மறைக் கும் நோக்கத்துடன் பக்கவாட்டில் நிழலை ஆங்காங்கு வீசி, கறுப்புத் திரையைப் பல இடங்களில் விரித்திருந்தது. நந்தவனத்தின் மற்றோர் ஓரத்திலிருந்த பெரிய மரங்கள் கரிகாலனுக்கு அபயம் அளிக்க வேண்டுமென்ற எண்ணத்தாலோ என்னவோ, தங்கள் இருப்பிடத்துக்குள் சந்திர கிரணங்களை வரவிடாமல் தடுக்க முயன்றன. இருப்பினும் வெண்மதிக்குத் துணையாய் நின்ற ஒரு சில கிளைகள் மட்டும் இப்படியும் அப்படியும் காற்றில் அசைந்து, இலைகளின் இடுக்குகளின் வழியாகக் கிரணங்களை உட்புகவிட்டு, “தப்பி வந்த திருடன் இதோ இருக்கிறான்” என்று காட்டிக் கொடுக்க முற்பட்டன.”