ராஜ திலகம் [Raja Thilagam]
(By Sandilyan) Read EbookSize | 23 MB (23,082 KB) |
---|---|
Format | |
Downloaded | 612 times |
Last checked | 10 Hour ago! |
Author | Sandilyan |
கால்களுக்குத் திடீரென்று யாரோ விலங்குகளைப் பூட்டியது போல் அந்தச் சொற்கள் பல்லவ இளவலின் நடையைத் தேக்கி விடவே, சட்டென்று நின்றுவிட்ட அவன் தனது கண்களை மணற்குன்றின் மேல் நின்றிருந்த மங்கை மீது மீண்டும் ஓட விட்டான். தன் கால்களுக்கு விலங்கிடும் வல்லமை அவள் விசித்திர அழகுக்கு எப்படி ஏற்பட்டது என்று சிந்திக்கவும் தொடங்கினான். பாவம், பல்லவ இளவல் எத்தனை அபாக்கியன்! கம்பன் பிறப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பு பிறந்து விட்டானே! இல்லையேல் மகாகவி கம்பன் தாரைதேர்ந்தெடுத்த பெண்களை 'விலங்கு மெல்லியல்' என்று வர்ணித்திருப்பதைப் படித்திருப்பானல்லவா? படித்திருந்தால் அற்புத அழகுக்கு எந்த ஆண்டவனையும் விலங்கிட்டு அசைவற்று நின்றுவிடச் செய்யும் விசித்திர சக்தி உண்டென்பதைப் புரிந்து கொண்டிருப்பானல்லவா? கம்ப காவியத்திற்கு முன் அவன் பிறந்தாலென்ன, உணர்ச்சியைத் தூண்டும் அந்த ஓவியப் பாவையை மீண்டும் பார்த்துப் பிரமித்து அசைவற்று நின்றான் பல்லவ இளவல் அந்த நேரத்தில்.
நிலவுக் கதிர்கள் அவள் உடலெங்கும் தழுவி செல்ல, நிலவுக்கு அழகு செய்யும் நிலவென யார் மனத்தையும் மயக்கும் மோகன வடிவத்துடன் நின்றிருந்தாள் மைவிழி அந்த மணல் மேட்டின் மீது. வாரிவிட்டு எடுத்துக் கட்டப்பட்டிருந்த வார்குழலின் பின் ஜடை முன்புறம் நின்றிருந்த பல்லவ இளவலின் கண்களுக்குத் தெரியாவிட்டாலும், வகிடு எடுத்து அழகாகச் சீவப்பட்ட கரிய குழலின் முன்னுச்சியும் அதிலிருந்து அலைந்து நுதலின் மேல் பகுதியை அடிக்கடி தடவிக் கொடுத்த இரண்டொரு மயிரிழைகளும் அவன் விழிகளுக்கு நன்றாகவே தெரிந்ததால், அவை தன்னை வாவாவென்று அழைப்பதாகவேமனத்தில் கற்பனை செய்து கொண்டான் அவன். முன்னுச்சியைத் தடவிய மயிர்களை அடுத்துப் பிறைமதியென விரிந்த நுதலும், நுதலின் கீழே வளைந்து கிடந்த புருவ விற்களும், அவற்றின் கீழே சதா மை தீட்டப்பட்டவை போல் கறுத்து, திறந்து திறந்து மூடும் முத்துச் சிப்பிகளெனக் காட்சியளித்த இமைப் பகுதிகளும், அவள் கண்களையென்ன கருத்தையும் கவர்ந்தன. அந்த இமைகளெனும் சிமிழ்களுக்கிடையேபளிச்சிட்ட கருமணிகள் இரண்டு சினத்துடன் தன்னை நோக்கினாலும், அவற்றின் கருமையிலும் ஒரு நீரோட்டமும் ஒளியும் கலந்து, சினத்திலும் அவற்றுக்கு இணையிலா அழகையும் கவர்ச்சியையும் அளித்ததைக்கண்ட இளவல், 'வைரத்தில் கறுப்புஜாதி என்பது ஒன்று இருந்தால் இப்படித்தான் இருக்கும்' என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். அந்த இரு கண்களுக்கும் இடையில் நுதலிலிருந்து இறங்கிய நாசி அதிக தீர்க்கமாக இல்லாமல் தேவையான அளவுக்கு இருந்ததையும், கன்னங்கள் மட்டும் மிகமிக வழ வழப்பாகவும் செழித்துக் கிடந்ததையும் கண்ட இளவரசன், அந்தக் கன்னங்களில் ஒன்றை, தலையிலிருந்து இறங்கி முத்தமிட்டுக் கொண்டிருந்த இரட்டை முத்துச்சரம் எத்தனை அதிர்ஷ்டம் வாய்ந்தது என்று எண்ணிப் பார்த்தான். அந்தக் கன்னங்களின் அழகுகளைத் தூக்கியடிக்கும் அவள் மதுர அதரங்களின்சிவப்பையும் அவையிரண்டும் குவிந்த போது தெரிந்த நீரோட்டத்தையும் கண்டு, 'பல்லவ வம்சத்தின் இணையிலாச் சொத்தும், என் தந்தையின் மார்பிலுள்ள ஆரத்தில் பதிந்து ஆடுவதும் ஆன உக்ரோதயம் என்ற ஜீவ மாணிக்கங் கூட இவள் அழகிய அதரங்களுக்கு ஈடாகாது' என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். அந்த மாணிக்க அதரங்கள் அவனுக்கு மதி மயக்கம் அளித்தனவென்றால், அவள் சங்குக்கழுத்தும், கழுத்தின் கீழே அவனை நோக்கிச் சினத்துடன் சீலை மறைவிலிருந்தே முறைத்த இரட்டை அழகுகளும் அவன் சிந்தையை அடியோடு நிலைகுலைய அடித்தன. அதுவரை அவன் பார்வையைப் பொறுத்துக் கொண்டிருந்த மைவிழி சட்டென்று மணல் மேட்டில் தன் கையை ஒரு புறம் ஊன்றிக் கால்களையும் சற்று நெருக்கிக் கொண்டு அரைவாசி சாய்த்த வண்ணம் உட்கார்ந்தாள்.”